

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டோர் வெளியில் நடமாட வேண்டாம் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அரசு அறிவிக்கை தெரிவிக்கிறது, ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் மட்டும் நடத்தப்படுவது ஏன் என்று திரிணமூல் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினார்.
“அரசு ஆலோசனை அறிக்கை 65 மற்றும் இந்த வயதுக்கு மேற்பட்டோர் வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்துகிறது. பாராளுமன்றம் மட்டும் ஏன் நடந்து கொண்டிருக்கிறது? ஏன் இந்தக் குழப்பமான தகவல்கள்? ராஜ்யசபா எம்.பி.க்களில் 44%-ம் லோக்சபா எம்.பி.க்களில் 22%-ம் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். அரசு அறிவுறுத்தலைப் புறக்கணிப்பதா? நீங்களே நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் டெரிக் ஓ பிரையன்.
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கான உரையில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியதோடு இது மக்கள் ஊரடங்கு என்றார்.
டெரிக் ஓ பிரையன் மேலும் தன் ட்விட்டரில், ஏன் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே தேச மக்களுக்கு உரையாற்றக் கூடாதா, ‘ஜனநாயகத்தின் கோவில்’ என்ன அவ்வளவு பொள்ளலாகவா தெரிகிறது? கூட்டாட்சித் தத்துவம் என்னவாயிற்று? வெறும் நாடகீயங்கள் அரங்கேற்றப்படுகின்றனே தவிர தீர்வுகள் இல்லை’ என்று மோடியையும் மத்திய அரசையும் சாடினார்.