

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மக்களுக்கு சமூக இடைவெளி தேவை என்று பிரதமர் மோடி ஆலோசனை கூறிவிட்டு, மறுபுறம் அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை நடத்துவதா என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் கரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மக்களை விழிப்புடன் இருக்கச் செய்யவும் பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் மோடி இந்த உரையில் மிக முக்கியமாக, குழந்தைகள், முதியோர்கள் சில வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீடுகளில் இருக்க வேண்டும், தேவையற்ற பயணத்தைக் குறைத்துக்கொண்டு, வீட்டிலேயே பணியாற்ற வேண்டும். கரோனா வைரஸைத் தடுத்துவிடுவோம் என்ற தீர்மானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.
அதுமட்டுமல்லாமல் வரும் 22-ம் தேதி மக்கள் நடத்தும் சுய ஊரடங்கை அறிவித்தார். அன்றைய தினம் மக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்
இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மக்கள் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், வீட்டுக்குள் இருக்க வேண்டும், வெளியே வரக்கூடாது என்று பிரதமர் மோடி அறிவுரை கூறுகிறார். மறுபுறம், நாடாளுமன்றத்தில் ஆயிரக்கணக்கில் அதிகாரிகள், எம்.பி.க்கள் ஊழியர்கள் ஒன்று கூடுகிறார்கள்.
அரசுப் பணிகளைக் குறைத்து வரும், பாதியாக மூடி வரும் மத்திய அரசு மறுபுறம் நாடாளுமன்றத்தை நடத்தியே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறது. நிச்சயமாக ஜனநாயக பாரம்பரியத்தை நிலைநாட்ட நாடாளுமன்றத்தை நடத்தவில்லை.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஆதரவு திரட்டவே நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படுகிறது. கமல் நாத்தால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். ஆனால், கரோனா வைரஸ் தொற்று உருவாகியுள்ள இந்த நேரத்தில் எவ்வாறு சட்டப்பேரவையைக் கூட்டுவது என்பதுதான் கமல்நாத்தும், அவரின் ஆதரவாளர்களும் சிந்தித்தார்கள்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறைக்கப்பட்டால், கமல்நாத்தின் வாதத்துக்கு வலு சேர்த்துவிட்டதுபோலாகும். ஆதலால், கரோனா போன்ற அவசரமான காலகட்டத்தில் கூட நாடாளுமன்றத்தை நடத்துவது அவசியம் என மோடி அரசு நினைக்கிறது.
கரோனா வைரஸைத் தடுக்க முழுமையான வழி என்பது அனைத்தையும் முடக்குவதுதான். மும்பையை முழுமையாக முடக்கி முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். அதுபோன்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக நமது மக்கள் பொது இடத்தில் எச்சில் துப்பாமல் இருந்தாலே கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதைப் பாதியாகக் குறைத்துவிடலாம்''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.