

பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட டெல்லி மாணவி நிர்பயா குடும்பத்தின் மூத்தோர் வாழும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மேத்வாரா கிராமத்தில் நிர்பயாவின் தாத்தா குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்ட இந்த நாள் ‘நிர்பயா தினம்’ என்று அனுசரிக்கப்பட வேண்டும் என்றார்.
சட்டத்துடன் விளையாடி தாமதப்படுத்திய நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது, இதற்கு பலதரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது.
இந்நிலையில் நிர்பயாவின் தாத்தா லால்ஜி சிங், “மார்ச் 20ம் தேதி ‘நிர்பயா தினம்’ ஆக அனுசரிக்கப்பட வேண்டும், இது ஒரு புதிய தொடக்கம். குற்றவாளிகள் கரோனாவை விட அபாயகரமானவர்கள், இப்போது அவர்கள் இல்லை.
பலாத்காரத்தில் நிர்பயா மரணமடைந்த பிறகே நாங்கள் ஹோலியையும் கொண்டாடவில்லை தீபாவளியையும் கொண்டாடவில்லை, இன்றுதான் எங்களுக்கு ஹோலி, தீபாவளி எல்லாம்.
ஆம் ஆத்மி அரசு கருணை மனுக்களை ஊக்குவிக்கவில்லை எனில் குற்றவாளிகள் எப்போதோ தூக்கு மேடை ஏறியிருப்பார்கள். பெண்கள் தொடர்பான குற்றங்களுக்கு ஒரு காலவரையரைக்குள் முடிவு எட்டப்படும் நிலையை ஏற்படுத்த வேண்டும்
நிர்பயாவின் மாமா சுரேஷ் சிங், மற்றும் சில கிராமத்தினர் “நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது என்று கோஷமிட்டு கலர்பொடி தூவி இசைநடனத்துடன் தூக்கு நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடினர்.
இன்று காலை தூக்கு என்றவுடனேயே இந்த கிராமம் உயிர் பெற்றது, ஊடகவியலாளர்களும் அங்கு குவிந்தனர்.
முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் சிங் ஆகியோர் இன்று காலை 5.30 மணிக்கு திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.