

கரோனா வைரஸ் தெலங்கானாவை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. முதலில் துபாயிலிருந்து வந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இவரை தொடர்ந்து இத்தாலியிலிருந்து வந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது. அவர் உட்பட மேலும் 4 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதனால் தற்போது இந்த 5 பேரும் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தோனேஷியாவிலிருந்து வந்த 8 பேர் கொண்ட குழுவினர் கரீம் நகருக்கு சென்றனர். அங்கு அவர்களில் 7 பேருக்கு கரோனா அறிகுறி இருந்ததால் அவர்கள் நேற்று காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்துக்கொண்டதில், அவர்கள் அனைவருக்கும் கரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தெலங்கானாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எணணிக்கை 13 ஆகஉயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று ஹைதராபாத்தில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், இந்தோனேஷியாவிலிருந்து வந்த குழுவினர் கரீம்நகரில் சில நாட்கள் வெளியில் நடமாடி உள்ளதால், அப்பகுதியில் சுமார் 3 கி.மீ சுற்றளவில், வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் அப்பகுதிகளில் கரீம் நகர் மக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.