

கரோனா வைரஸ் பரவல் தடுப்புநடவடிக்கையாக ஆயுள் கைதிகளை பரோலில் விடுவிப்பது குறித்து மேற்குவங்க சிறைத் துறைபரிசீலனை செய்து வருகிறது.
இதுகுறித்து மேற்குவங்க சிறைத் துறை துணை பொது இயக்குநர் அருண் குப்தா கூறுகையில், “கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை விதிகளை சிறைகளுக்குப் பொருத்தி பார்த்தோமானால், சிறையின் ஒவ்வொருஅறையிலும் உள்ள கைதிகளுக்கும் போதுமான இடைவெளி இருப்பது அவசியம்.
மேற்குவங்கத்தை பொறுத்த வரை மொத்தம் 60 சிறைகள் உள்ளன. இவற்றில் 25 ஆயிரம் கைதிகள் உள்ளனர். அவர்களில் 7000 பேர் தண்டனைப் பெற்ற கைதிகள். மீதமுள்ளவர்கள் மீது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த 7000 பேரில் ஆயுள் கைதிகளும் அடக்கம். அப்படிப்பார்த்தால் குறுகலான இட வசதியில் கூடுதலான எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அது கரோனா தொற்று பரவும் காலத்தில் ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பதால் ஆயுள் கைதிகளில் யாருக்கெல்லாம் பரோலில் செல்ல விருப்பம் உள்ளது என்றுகலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறோம்.
விரைவில் யாரையெல்லாம் பரோலில் அனுமதிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். இதற்கிடையில் கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் முகக் கவசம் விநியோகிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அருண் குப்தா தெரிவித்தார். - பிடிஐ