Last Updated : 19 Mar, 2020 08:28 PM

 

Published : 19 Mar 2020 08:28 PM
Last Updated : 19 Mar 2020 08:28 PM

எனக்கு மட்டுமல்ல, பஞ்சாபில் பாதி மக்களுக்கு பிறப்புச் சான்று இல்லை; சிஏஏ அரசியலமைப்புக்கு விரோதமானது: முதல்வர் அமரிந்தர் சிங் காட்டம்

எனக்கு மட்டுமல்ல, பஞ்சாபில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. எங்களால் எப்படி குடியுரிமையை நிரூபிக்க முடியும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் காட்டமாகத் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சிஏஏ சட்டத்துக்கு எதிராகப் பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், சண்டிகரில் இன்று சிஏஏ எதிர்ப்புக் கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் அமரிந்தர் சிங் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மக்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கிருந்து வந்தவர்கள்.

குடியுரிமையை நிரூபிக்க மக்கள் அனைவரும் பிறப்புச் சான்றிதழ் தேவை என்றால், இந்த மக்கள் அனைவரும் பிறப்புச் சான்றிதழ் பெறுதற்கு பாகிஸ்தான் செல்லுங்கள் என்று மத்திய அரசு கூறப்போகிறதா?

அப்படிப் பார்த்தால் எனக்கு மட்டுமல்ல, பஞ்சாப் மாநிலத்தில் பாதி மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. அவ்வாறு எனக்கோ, என் மாநில மக்களுக்கோ பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால், என்பிஆரில் சந்தேகம் என்று முத்திரை குத்தப்படுவார்கள்.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய மூன்றையுமே என்னுடைய அரசு முழுமையாக எதிர்க்கிறது. இவை மூன்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை. வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பு மாநிலத்தில் நடக்கும். ஆனால், மதம், சாதி, இனம் வாரியாக கணக்கெடுப்பு நடக்காது.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு இந்தச் சட்டங்கள், ஆவணங்கள் மூலம் எதை நிரூபிக்க முயல்கிறது?இந்தியாவுக்காகப் போரில் சண்டையிட்ட பல ராணுவ வீரர்கள் குடியுரிமையை இழக்க வேண்டுமா? கடந்த 72 ஆண்டுகளாக இந்த தேசம் பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருக்கிறது.

பல்வேறு மதங்கள், சாதிகள், இன மக்கள் ஒன்றாக வாழ்ந்து அரசியலமைப்பின் உண்மையான மகத்துவத்தை, முகவுரையை உணர்த்துகிறார்கள். ஆனால் திடீரென நாட்டைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். மக்களின் எதிர்வினை குறிப்பாக இளைஞர்களின் கோபம் இந்தச் சட்டம் செல்லாது என்பதைத்தான் காட்டுகிறது''.

இவ்வாறு அமரிந்தர் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x