

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது.
வரும் 31-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதேசமயம், கோயிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கும் மக்கள் வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வந்து 28 நாட்கள் இருந்த பின் தங்களின் உடல் நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு திருப்பதிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகக் கணிசமாகக் குறைந்தது.
இந்த சூழலில் ஆந்திராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலை மூட நிர்வாகம் முடிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் திருப்பதி கோயிலுக்கு இன்று வந்த வடமாநில பக்தர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, கோயிலை மூடுவது என முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து ஆந்திரப் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் அலா நானி கூறுகையில், " திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கியக் கோயில்களும் வரும் 31-ம் தேதி வரை மூடப்படும். பக்தர்கள் யாரும் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேசமயம், கோயிலில் சுவாமிக்கு அன்றாடம் நடக்கும் அனைத்து ஆராதனைகள், பூஜைகள், வழக்கம் போல் நடைபெறும்'' என்றார்.