இந்தியாவில் கரோனா வைரஸுக்கு 4-வது பலி: பாதிப்பு 173 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கரோனா வைரஸுக்கு 4-வது பலி: பாதிப்பு 173 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

பஞ்சாப்பைச் சேர்ந்த நோயாளி ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்ததை அடுத்து இந்தியாவில் கரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்தள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலகத்தையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காத நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. அடுத்த 2 வாரங்களுக்கு கிட்டத்தட்ட அனைத்துவிதமான இயல்பு வாழ்க்கையும் முடங்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் இதுவரை 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியாவுக்கு வந்த 25 வெளிநாட்டினரும் உள்ளனர்.

இத்தாலியைச் சேர்ந்த 17 பேர், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மூன்று பேர், இங்கிலாந்திலிருந்து இரண்டு பேர், கனடா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவர்.

இந்த எண்ணிக்கையில் பஞ்சாப், டெல்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து நான்கு இறப்புகளும் பதிவாகியுள்ளன. கரோனா நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டு இந்தியாவில் இதுவரை நான்கு பேர் இறந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் செயலில் உள்ள கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பதிவுகளின் எண்ணிக்கை இதுவரை 149 ஆக உள்ளது. அதன்படி, மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர் / வெளியேற்றப்பட்டனர் / இடம்பெயர்ந்துள்ளனர்.

டெல்லியில் இதுவரை 12 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு வெளிநாட்டவர் அடங்குவர். உத்தரப் பிரதேசத்தில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 19 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மூன்று வெளிநாட்டினர் உட்பட 47 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

கர்நாடகாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 14 பேர் உள்ளனர். லடாக்கில் நோய்த்தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை 8 பேர். ஜம்மு-காஷ்மீரில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வெளிநாட்டினர் அடங்கிய ஆறு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெலங்கானா தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலும் பஞ்சாப்பிலும் இதுவரை தலா இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா, ஒடிசா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் சண்டிகரில் தலா ஒருவருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. ஹரியாணாவில் வெளிநாட்டினர் 14 பேர் உள்ளிட்ட 17 பேருக்கு இந்நோய் கண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in