Last Updated : 19 Mar, 2020 06:02 PM

3  

Published : 19 Mar 2020 06:02 PM
Last Updated : 19 Mar 2020 06:02 PM

நாளை அதிகாலை 5.30 மணிக்குள் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை: அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்தன

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் குற்றவாளிகள்.

புதுடெல்லி

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டதால், நாளை அதிகாலை 5.30 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் இறுதியாகத் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

குற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங் ஆகியோர் தாக்கல் செய்த 2-வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் நிலுவையில் இருப்பதால், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ராணா பிற்பகல் 2.30 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் இர்பான் அகமது நீதிமன்றத்தில் கூறுகையில், "குற்றவாளிகள் 4 பேருக்கும் எந்தவிதமான சட்ட வாய்ப்புகளும் நிலுவையில் இல்லை. பவன் குப்தா, அக்சய் ஆகியோரின் 2-வது கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் பரிசீலிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

நீதிபதி தர்மேந்திர ராணா பிறப்பித்த உத்தரவில், "குற்றவாளிகள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில் எந்தவிதமான நியாயமான காரணங்களும் கூறப்படவில்லை. தங்களின் சட்ட வாய்ப்புகள் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். ஆதலால், குற்றவாளிகளின் தண்டனையை நிறுத்தி வைக்க எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. ஆதலால் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்" என உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட குற்றவாளி அக்சய் குமார் சிங்கின் மனைவி நீதிமன்றத்தில் அலறி கண்ணீர் விட்டார். இனிமேல் எவ்வாறு நான் உயிர் வாழ்வேன், என்னையும் தூக்கிலிடுங்கள் என்று கண்ணீர் விட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை அதிகாலை 5.30 மணிக்குள் திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்பது உறுதியாகிவிட்டதாக திஹார் சிறை நிர்வாகிகள் தெரிவித்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x