

மகாராஷ்டிராவில் கரோனா தொற்று தீவிரமடைவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நாட்டிலேயே அதிகஅளவு பாதிப்புகள் இருப்பதால் அங்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மும்பை நகரில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கரோனா தொற்று தீவிரமடைவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
உலக மக்கள் வைரஸுக்கு எதிரான போரை நடத்தி வருகிறார்கள். வீட்டிலேயே தங்கி இருங்கள். ரயில், பேருந்து என எந்த பொது போக்குவரத்தையும் பயன்படுத்த வேண்டாம்.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்கிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்கிறது. இதனை தடுக்க மகாராஷ்டிர அரசும், ஊழியர்களும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
எனினும் மக்கள் கவலைப்பட வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரோனா வைரஸ் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.