

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை தங்கள் சேவையை நிறுத்தி வைக்க மும்பை டப்பாவாலாக்கள் முடிவு செய்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நாட்டிலேயே அதிகஅளவு பாதிப்புகள் இருப்பதால் அங்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மும்பை நகரில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மும்பையில் நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை தங்கள் சேவையை நிறுத்தி வைக்க மும்பை டப்பாவாலாக்கள் முடிவு செய்துள்ளனர்.
அலுவலகங்களில் பணியாற்றுவோர், நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு மதிய உணவு டப்பாக்களை வீடுகளில் பெற்று அவர்கள் பணியாற்றும் இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை செய்து வரும் டப்பாவாலக்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் பணியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.
எனவே நாளை முதல் மும்பையில் டப்பாவாலாக்களின் சேவை கிடைக்காது.