Last Updated : 19 Mar, 2020 02:07 PM

 

Published : 19 Mar 2020 02:07 PM
Last Updated : 19 Mar 2020 02:07 PM

கரோனா வைரஸ் பீதி: மார்ச் 31-ம் தேதிவரை 155 ரயில்கள் ரத்து: இன்று 84 ரயில்கள் கேன்சல்

கரோனா வைரஸ் அச்சத்தால், பயணிகள் பெரும்பாலானோர் தங்கள் பயணத்தை ரத்து செய்ததால், இன்று 84க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம் கடந்த சில நாட்களில் 155 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாளை(20ம்தேதி) முதல் 31-ம் தேதிவரை இந்த 155 ரயில்களும் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது கடினமாக இருக்கிறது, இதுவரை கரோனா வைரஸால் இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தேவையின்றி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம், வீட்டிலேயே தங்கி இருக்கவும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது, திரையரங்குகள், அருங்காட்சிகள் உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களையும் 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக ரயில் பயணத்தைத் தவிர்க்கும் வகையில் மக்கள் தாங்கள் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் ரத்து செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 60 சதவீத ரயில்வே டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் 84-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 155 ரயில்கள் வரும் 20-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் ஐஆர்சிடிசி சார்பில் இயக்கப்படும் இரு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில், ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலும் அடங்கும். கடந்த ஒரு வாரத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், ரயில்வே துறைக்கு ரூ.454 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என ரயில்வே புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " கரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாகப் பயணிகள் பெரும்பாலானோர் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். பயணிகளின் கூட்டம் குறைவாக இருப்பதன் காரணமாக, 155 ரயில்கள் வரும் 20ம் தேதிமுதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகளுக்கு எந்தவிதமான கட்டணமும் பிடிக்கப்படாது, 100 சதவீத கட்டணமும் பயணிகளுக்குத் திருப்பி அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும் இயக்கப்படும் மகாராஜா, புத்திஸ்ட், பாரத் தர்ஷன் போன்ற ரயில்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன. சமீபத்தில் இயக்கப்பட்ட மும்பை-அகமதாபாத் தேஜாஸ் ரயில், புதுடெல்லி,-லக்னோ ஹம்சபர் ரயில், இந்தூர்-வாரணாசி ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்களில் உணவுகேண்டீனில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மிகக் கடுமையான விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. யாருக்கேனும் காய்ச்சல், இருமல் இருந்தால், அவர்களை பணிக்கு நியமிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து அனைத்துப் பயணிகளுக்கும் தனித்தனியாகத் தகவல் தெரிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x