Last Updated : 19 Mar, 2020 01:38 PM

 

Published : 19 Mar 2020 01:38 PM
Last Updated : 19 Mar 2020 01:38 PM

நாளை தூக்கு தண்டனை: உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நிர்பயா வழக்கு குற்றவாளிகள் மாறி மாறி உச்ச நீதிமன்றத்தில் மனு

நிர்பயா குற்றவாளிகள் : கோப்புப் படம்.

புதுடெல்லி

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, குற்றம் நடந்தபோது நான் மைனராக இருந்தேன். ஆதலால், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார், அக்சய் குமார் சிங் ஆகியோருக்கு மூன்றாவது முறையாக டெத் வாரண்டை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த 4 குற்றவாளிகளுக்கும் நாளை காலை 5.30 மணிக்கும் திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திஹார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த சூழலில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிர்பயா பாலியல் வன்கொடுமை நடந்தபோது, நான் மைனராக இருந்தேன். ஆதலால், எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்எப் நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகிய 6 நீதிபதிகள் அமர்வு முன் இன்று காலை விசாரிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி என்.வி. ரமணா கூறுகையில், "இனிமேல் எந்த வழக்கும் இதில் விசாரிக்கப்படாது. இந்த மனு வாய்மொழியாக விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்படுகிறது. குற்றவாளியின் சீராய்வு மனு தொடர்பான அனைத்து மனுக்களையும் தீர ஆய்வு செய்துவிட்டோம். எங்களைப் பொறுத்தவரை வழக்கு முடிந்துவிட்டது. சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது" என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதற்கிடையே குற்றவாளிகளில் மற்றொருவரான முகேஷ் சிங் சார்பில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது, தான் டெல்லியில் இல்லை என்று முகேஷ் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிடுவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முகேஷ் சிங் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை காலை 5.30 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் சூழலில் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒவ்வொருவரும் மாறி மாறி மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x