கரோனா அச்சம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை 

படம்: பிரதீக் குமார்.
படம்: பிரதீக் குமார்.
Updated on
1 min read

சோதனைக்குச் சென்ற ரத்த மாதிரி முடிவு வரும் வரை காத்திருக்க முடியாமல், டெல்லியில் ஒரு இளைஞர் மருத்துவமனையின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் இறந்துள்ளனர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியின் மையப் பகுதியில் ரிங்ரோடில் அமைந்துள்ள சப்தர்ஜிங் மருத்துவமனையின் 7-வது மாடியிலிருந்து ஒரு இளைஞர் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். சோதனைக்குச் சென்றுள்ள தன்னுடைய ரத்த மாதிரி முடிவு வரும் வரை காத்திருக்காமல், பொறுமையின்றி அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டெல்லி சப்தர்ஜிங் காவல்நிலைய போலீஸார் கூறியதாவது:

''கோவிட்-19 நோய்த் தொற்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் 7-வது மாடியில் உள்ள சிகிச்சைப் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் தொடர்பான அவரது நிலை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் மருத்துவப் பரிசோதனை முடிவுக்காக மருத்துவர்கள் காத்திருந்தனர். இதற்கிடையில் நேற்று அவர் தங்கியிருந்த 7-வது மாடியின் சிகிச்சை பெற்றுவரும் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து வந்தார். தனிமைப்படுத்தப்பட்ட வார்டின் கதவுகளை உடைத்தார். 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்’’.

இவ்வாறு டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in