

நகர்ப்புற ஏழைகளின் நலனுக்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அனைவருக்கும் வீடு திட் டத்தை செயல்படுத்துவதற்காக 9 மாநிலங்களைச் சேர்ந்த 305 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் ஆவாஸ் யோஜனா (அனைவருக்கும் வீடு) என்ற திட்டத்தை கடந்த ஜூன் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார்.
இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு வரும் 2022-க்குள் (75-வது சுதந்திர தினம்) 2 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி நிதியுதவி வழங்கும்.
இந்த திட்டத்தின் தொடக்கமாக 9 மாநிலங்களில் உள்ள 305 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் 36 நகரங்கள், குஜராத்தில் 30, ஜம்மு காஷ்மீரில் 19, ஜார்க்கண்டில் 15, கேரளாவில் 15, மத்தியப் பிரதேசத்தில் 74, ஒடிசாவில் 42, ராஜஸ்தானில் 40, தெலங்கானாவில் 34 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக இந்த அமைச்சகத்துடன் 6 மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. அனைவருக்கும் வீடு திட்டத்தை வெற்றியடையச் செய்யும் வகையில் தேவையான 6 கட்டாய சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என அவை அந்த ஒப்பந்தத்தில் உறுதி அளித்துள்ளன.
இந்த திட்டத்தின்படி, பல்வேறு தொகுப்புகளின் கீழ் ஒரு வீடு கட்டுவதற்கு ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.3 லட்சம் வரை மத்திய அரசு நிதியுதவி வழங்கும். அதாவது குடிசையை (நிலம் ஆதாரம்) கான்கிரீட் வீடாக மாற்றுவது, கடனுடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம், கூட்டு முறையில் மலிவான செலவில் வீடு என பல்வேறு தொகுப்புகளுக்கேற்ப நிதியுதவி மாறுபடும்.