

கர்நாடகாவில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் கைகளில் தனிமைப்படுத்தபட வேண்டிய காலத்தை குறிப்பிட்டு எளிதில் அழியாத மையால் முத்திரை குத்தப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
ரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அடையாளம் காணும் வகையில் மகாராஷ்டிரா அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்படும் மக்களை மற்றவர்கள் அடையாளம் காணும் வகையில் அவர்களது கையில் அதற்கான முத்திரை குத்தப்படுகிறது.
இதன் மூலம் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் பற்றி விவரத்தை தெரிந்த அவர்களிடம் இருந்து விலகி இருக்க முடியும். கரோனா வைரஸ் பாதித்து கண்காணிப்பில் இருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது.
இந்தநிலையில் கர்நாடகாவிலும் முதல்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் கைகளில் தனிமைப்படுத்தபட வேண்டிய காலத்தை குறிப்பிட்டு முத்திரை குத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்து இருக்கும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு நடத்தப்படும் சோதனைக்கு பிறகு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தபட வேண்டிய கால அளவை குறிபிட்டு அழியாத மையால் முத்திரை குத்தப்படுகிறது. பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.