

வெளிநாடுகளில் தற்போது தங்கியுள்ள இந்தியர்கள் 276 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் தற்போது தங்கியுள்ள இந்தியர்கள் 276 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:
வெளிநாடுகளில் தற்போது தங்கியுள்ள இந்தியர்கள் 276 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரான் சென்ற 255 பேருக்கும், ஐக்கிய அரபு அமீரகம் சென்ற 12 பேருக்கும், இத்தாலியில் 5 பேருக்கும், ஹாங்காங் மற்றும் குவைத், இலங்கை, ரவண்டா ஆகிய நாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் தலா ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்றியுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.