

உத்தரப் பிரதேச மாநிலம் குறித்து மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, நம்பிக்கையையும் நல்ல நிர்வாகத்தையும் பாஜக அரசு கடந்த 3 ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் 3 ஆண்டுகளை நாளையுடன் (19-ம் தேதி) நிறைவு செய்கிறார். இதற்கு முன் உத்தரப் பிரதேசத்தை ஆண்ட பாஜக முதல்வர்களில் ஒருவர் கூட 3 ஆண்டுகளை நிறைவு செய்தது கிடையாது.
அந்த வகையில் முதல் முறையாக 3 ஆண்டுகளை நிறைவு செய்யும் பாஜக சார்பில் முதல் முதலமைச்சர் ஆதித்யநாத் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இருந்த கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங் ஆகியோர் முழுமையாக 3 ஆண்டுகளை முதல்வராக இருந்து நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 403 இடங்களில் 312 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. கோரக்பூர் தொகுதி எம்.பி.யாக நான்கு முறை (1998, 1999, 2004, 2009, 2014) இருந்த யோகி ஆதித்யநாத் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தன்னுடைய அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''உத்தரப் பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகால பாஜக அரசின் ஆட்சியில் மாநிலம் குறித்த மக்களின் மனதில் மாற்றம் கொண்டுவந்து வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்று, நம்பிக்கையையும், நல்ல நிர்வாகத்தையும் அரசு அளித்துள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் மேம்படுத்தப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனையாகும். மாநிலத்தில் எங்கும் கலவரம் நடக்கவில்லை. குற்ற விகிதம் பெருவாரியாகக் குறைந்துவிட்டது.
சட்ட விரோதமாக கால்நடைகளை வெட்டும் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பெண்ளுக்குத் தொந்தரவு செய்யும் நபர்களைப் பிடிக்க ஆன்ட்டி ரோமியா படை உருவாக்கப்பட்டுப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சவால்களை வெற்றிகரமாக எனது அரசு முறியடித்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களான பிரதமர் ஆவாஸ் யோஜனா, ஸ்வச் பாரத் திட்டம், ஆயுஷ்மான் பாரத், பிரதமர் உஜ்வாலா யோஜனா, சவுபாக்யா ஆகிய திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் ஆசியாலும், நல்வழிகாட்டலாலும் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
கும்பமேளா வைபவத்தைச் சிறப்பாக நடத்தினோம். 24.56 கோடி மக்கள் பங்கேற்று, உலகிற்கே மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்கினோம். நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமாக உ.பி. இருக்கிறது. இதற்கு முந்தைய அரசுகளில் சட்டம்-ஒழுங்கு மோசமாக இருந்த நிலையில் அந்த நிலையை நாங்கள் வந்து மாற்றியுள்ளோம்.
இன்னும் சில துறைகளில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் 40 சதவீதம் முடிந்துவிட்டன. இந்த ஆண்டு இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும்.
பண்டேல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் தொடங்கிவிட்டன. அடுத்த ஆண்டு இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். மீரட் முதல் அலகாபாத் வரை கங்கா எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த 3 சாலைகளும் நடைமுறைக்கு வரும் போது, இந்தியப் பொருளாதாரத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும்''.
இவ்வாறு ஆதித்யநாத் தெரிவித்தார்.