Last Updated : 18 Mar, 2020 01:48 PM

 

Published : 18 Mar 2020 01:48 PM
Last Updated : 18 Mar 2020 01:48 PM

கரோனா அச்சம்: பாஜக சார்பில் அனைத்துவிதமான போராட்டங்களும் ஒரு மாதம் ஒத்திவைப்பு: ஜே.பி. நட்டா அறிவிப்பு

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்துவரும் நிலையில், அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அடுத்த ஒரு மாதத்துக்கு அனைத்துவிதமான போராட்டங்களையும் ஒத்திவைப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இன்று அறிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவித் தொடங்கியுள்ளது. இதுவரை 3 பேரின் உயிரைக் காவு வாங்கியுள்ள கரோனா வைரஸுக்கு 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதற்கிடையே பாஜக எம்.பி.க்களின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, "அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதிக்குச் சென்று மக்கள் மத்தியில் கரோனா வைரஸ் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதுமட்டுமல்லாமல் எந்தவிதமான போராட்டங்களையும் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்த வேண்டாம்.

பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா : கோப்புப் படம்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் எந்தவிதத்திலும் குறைக்கப்படாது. பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்து மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்'' என்றார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள், விமான பைலட்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், மக்களிடம் கரோனா குறித்து நல்லவிதமான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஊடகங்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்தார்

இதையடுத்து, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''பாஜகவின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பாஜக சார்பில் அனைத்துவிதமான போராட்டங்கள், தர்ணாக்கள், உண்ணாவிரதங்கள் அனைத்தையும் அடுத்த ஒரு மாதத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்படுகிறது.

போராட்டம், தர்ணாக்கள் நடத்துவதற்குப் பதிலாக பாஜக சார்பில் கட்சிப் பிரதிநிதிகள் 5 பேர் மட்டும் சென்று அந்தந்த குறிப்பிட்ட அதிகாரிகளிடத்தில் கோரிக்கை மனு அளிக்கலாம். இந்த முடிவை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில பாஜக கிளைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். சுற்றறிக்கையும் அனுப்பப்படும்.

அனைத்து பாஜக நிர்வாகிகளும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும், எதைச் செய்ய வேண்டும், செய்யக்கூடாது போன்றவற்றை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

மேலும், நம்முடைய இடத்தையும், சுய சுத்தத்தையும் நாம் பராமரிக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் நாமும் பதற்றமடையக் கூடாது. மக்களையும் பதற்றப்படுத்தக் கூடாது.

பிரதமர் மோடி சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பேசும்போது, நாம் பதற்றம் அடையாமல் இருக்கும்போதுதான், கரோனா வைரஸ் பரவும் விகிதங்களை அதிகப்படுத்தாமல் தடுக்க முடியும் என்றார்''.

இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x