நிலச் சட்டம்- மக்கள் சக்தி முன்பு மோடிக்கு தோல்வி: சோனியா

நிலச் சட்டம்- மக்கள் சக்தி முன்பு மோடிக்கு தோல்வி: சோனியா
Updated on
1 min read

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில், பிரதமர் மோடியின் முயற்சி மக்களின் சக்தி முன்பு தோல்வி அடைந்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை ஆளும் கூட்டணி சார்பில் பிரமாண்ட பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசும்போது, "பிரதமர் நரேந்திர மோடி அரசு நான்கில் ஒரு பங்கு காலத்தை நிறைவு செய்துள்ளது. இதுவரையில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி அலங்கார வார்த்தைகளை அள்ளி வீசுகிறார். ஆனால் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் வியாபம் ஊழல் விவகாரம் குறித்து அவர் தொடர்ந்து மவுனம் காக்கிறார்.

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த காங்கிரஸ் அரசின் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கி அந்தத் திட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது.

விவசாயிகளின் நலனுக்கு எதிராக நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கொண்டுவர முயற்சித்தார். ஆனால் மக்களின் சக்தி முன்பு அவர் தோற்றுபோய்விட்டார்.

காஷ்மீர் எல்லையில் அப்பாவி மக்களை பாகிஸ்தான் ராணுவம் கொன்று குவிக்கிறது. ஆனால் மத்திய அரசு கண்டும்காணாமல் இருக்கிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளே இதற்கெல்லாம் காரணம்.

பிஹாரையும் பிஹார் மக்களையும் தரக் குறைவாகப் பேசுவதை பிரதமர் மோடி வாடிக்கையாகக் கொண்டுள்ளார். வரும் பேரவைத் தேர்தலில் அவருக்கு பிஹார் மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்" என்றார் சோனியா காந்தி.

பிஹார் சட்டப்பேரவையின் பதவி காலம் நவம்பர் 29-ம் தேதி நிறைவடைகிறது. அங்கு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலை முன்னிட்டு ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன. பாஜக கூட்டணியில் லோக் ஜனசக்தி, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி ஆகியோர் இணைந்துள்ளனர்.

இரு கூட்டணிகளும் இப்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் பிஹார் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கி சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். மறுபுறம் முதல்வர் நிதிஷ்குமார் ரூ.2.70 லட்சம் கோடியிலான திட்டங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in