

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 15-ம் தேதி வரை போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 15-ம் தேதி வரை போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று பாஜக தொண்டர்களுக்கும் மக்களுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறும்போது, ''நாடு முழுவதும் மக்களும் பாஜக தொண்டர்களும் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். ஏப்ரல் 15 வரை இதைக் கடைபிடியுங்கள். சிறிய குழுக்களாகக் கூடியோ காணொலி மூலமாகவோ நம்முடைய கருத்தைத் தெரிவிக்கலாம்'' என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாஜக தொண்டர்கள் மாஸ்க் மற்றும் சேனிடைசர்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று மனோஜ் திவாரி தெரிவித்தார்.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ள கரோனா வைரஸுக்கு இதுவரை 147 பாதிக்கப்பட்டுள்ளனர்.