கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை; சவுதி சென்று திரும்பியதால் தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்.பி.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை; சவுதி சென்று திரும்பியதால் தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்.பி.
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்மையில் சவுதி அரேபியா சென்ற திரும்பிய பாஜக எம்.பி. சுரேஷ் பிரபு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிகஅளவில் கரோனா தொற்று காணப்படுகிறது. இதனால் அங்கு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய அமைச்சர் முரளிதரன் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். அண்மையில் அவர் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அதில் மூத்த மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு கரோனாவை தடுப்பது பற்றிய ஆலோசனைகளை வழங்கினர்.

அந்த கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அவர் அண்மையில் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று திரும்பியுள்ளார். அங்கிருந்து அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை மேற்கொள்வதாகவும் மத்திய அமைச்சர் முரளிதரன் முடிவு செய்துள்ளார். .

இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான சுரேஷ் பிரபுவும் கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் அவர் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். அங்கு நடந்த வர்த்தக மாநாட்டில் பங்கேற்றார். இந்தியா திரும்பிய அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

தற்போதைய நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக தெரியவில்லை. எனினும் 15 நாட்கள் கண்காணிப்பில் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் வீட்டில் தானாகவே தனிமைப்படுத்திக் கொள்வதாக கூறியுள்ளார். வீட்டில் இருந்தபடி வழக்கமான பணிகளை கவனிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in