

மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்பது ஏன் என்பது தொடர்பாக பதவியேற்ற பின்னர் விளக்கம் அளிப்பேன் என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் கோகோயை மாநிலங்களவை எம்.பியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் பரிந்துரைத்துள்ளார். மக்களவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வருவதைப்போல, மாநிலங்களவைக்கு அந்தந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் வருவர். மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் 233 பேர் மறைமுக தேர்தல் மூலமும் 12 பேர்குடியரசுத் தலைவரின் நியமனத்தின் மூலமும் உறுப்பினராக பதவியேற்பர்.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உறுப்பினர் நியமனத்தைக் குடியரசுத் தலைவர் மேற்கொள்ளலாம். அப்படி ஒரு நியமன உறுப்பினராகத்தான் தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார் ரஞ்சன் கோகோய். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று நிருபர்களிடம் ரஞ்சன் கோகோய் கூறியதாவது: நான் நாளை (இன்று) அநேகமாக டெல்லி செல்லவுள்ளேன். முதலில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கிறேன். அதன் பிறகு நான் ஏன் இந்தப் பதவியை ஏற்கிறேன் என்பதை ஊடகங்கள் மூலமாக விளக்குவேன்.
நான் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. தேசத்தின் எழுச்சிக்காக நாடாளுமன்றமும், நீதித்துறையும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது.
மாநிலங்களவையில் நான் இருப்பதால், அது நீதித்துறையின் பல்வேறு கருத்துகளை பிரதிபலிக்கவும், கூறுவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். நாடாளுமன்றத்தில் எனது குரல் தனித்து ஒலிப்பதற்கு கடவுள் எனக்கு சக்தியைத் தரவேண்டும். பதவியேற்புக்குப் பின்னர் நான் விளக்கமாக இதுதொடர்பாக உங்களிடம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.- பிடிஐ