

கேரளாவைச் சேர்ந்த ஒரு மருத்துவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவருடன் பழகிய 43 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் தனது கோரப் பார்வையால் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகில் 1.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் படிப்படியாக நுழைந்துள்ள கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவரை 137 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் புகழ் பெற்ற மருத்துவ நிறுவனமான ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு மருத்துவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இந்த நிறுவனம் வருகிறது.
இந்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு மருத்துவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து, அவருடன் பழகிய 43 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கேரளாவைச் சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான வி.முரளிதரனும் இந்த மருத்துவ நிறுவனத்துக்குச் சென்று மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் தானாகவே முன்வந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
மத்திய அமைச்சர் முரளிதரன் தனிமைப்படுத்திக் கொண்டதையடுத்து, அவருடன் பழகிய பாஜக நிர்வாகிகள் சிலரும் வேறு வழியின்றி தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இந்தச் சம்பவம் குறித்துக் கேட்டறிந்த முதல்வர் பினராயி விஜயன், இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்க கூடாது. இனிமேல் நடக்காமல் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஸ்பெயின் நாட்டிலிருந்து கடந்த 1-ம் தேதி கேரளா திரும்பி, 2-ம் தேதி முதல் பணிக்குச் சென்றுள்ளார். கடந்த 8-ம் தேதி அவருக்குத் தொண்டையில் வலி ஏற்பட்டுள்ளது. அதன்பின் முகத்தில் கவசம் அணிந்து மார்ச் 10, 11-ம் தேதி பணிக்குச் சென்றுள்ளார். அதன்பின் அவருக்கு மருத்துவச் சோதனை நடத்தியதில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் 14-ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டார்.
இப்போது இந்த மருத்துவருடன் தொடர்பில் இருந்த 43 மருத்துவர்களும் தங்களின் வழக்கமான பணிகளையும், நோயாளிகளையும் கவனிக்க முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தின் மிகப்பெரிய உயரிய மருத்துவமனை, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரே நேரத்தில் 43 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மக்களுக்குத் தேவையான முறையான மருத்துவச் சிகிச்சை வழங்க அனுபவமான, தேர்ந்த மருத்துவர்கள் இல்லாமல் உயரிய மருத்துவமனை திண்டாடி வருகிறது. இது பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.