

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 54 ஆயிரம் பேர் மருத்துவப் பணியாளர்கள் மூலமாக மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ள கரோனா வைரஸுக்கு இதுவரை 120 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கையாகப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு நாடு முழுவதும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுமிடங்களான ஷாப்பிங் மால், திரையரங்குகள் ஆகியவற்றையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கரோனா வைரஸ் குறித்த மத்திய அரசு எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:
''கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகும் சூழல் ஏற்பட்டால் மக்கள் அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கிராமங்கள், நகரங்கள் அளவில் தனியார் மருத்துவர்களும், அரசு மருத்துவமனை மருத்துவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
ஒவ்வொரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அறிந்துகொண்டு அங்கு சென்று பார்வையிட்டு தகவல் அளித்தால் சேவையை மேம்படுத்த உதவும்.
இதுவரை நாடு முழுவதும் 54 ஆயிரம் பேர் மருத்துவப் பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களைக் கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்குத் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவர்கள் உடல்நிலை சீரழிந்து வருகிறது.
சில மருத்துவ முகாம்களில் மோசமாகப் பராமரிக்கப்படுவதாகப் புகார்கள் வருகின்றன என்ற குற்றச்சாட்டை ஏற்கிறேன். அனைத்துக் கழிப்பறைகளையும் நம்மால் 5 நட்சத்திர ஹோட்டல் போல் பராமரிக்க இயலாது. இதுபோன்ற புகார்களுக்கு முக்கியத்துவம் அளித்து குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற புகார்கள் அடிக்கடி வருவதில்லை. வரும் புகார்கள் சரி செய்யப்படுகின்றன.
இந்திய ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச ஆய்வாளர்களுடன் தொடர்ந்து கரோனா வைரஸ் குறித்த ஆய்வு குறித்து தொடர்பிலிருந்து வருகிறார்கள். அமெரிக்காவில் கரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. புதிய தடுப்பு மருந்து கண்டுபடிக்கப்பட்டு அது சோதிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு முடிந்த அளவு தரமான சிகிச்சை அளித்து வருகிறது''.
இவ்வாறு ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதிலைக் கேட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமார் மத்திய அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டினார். ஆனால், வரும் நாட்களில் இன்னும் பெரிய சவால்களைச் சந்திக்க நேரிடும் என்று அவர் தெரிவித்தார்.