

தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு ஊக்கநிதியாக ரூ.10,000 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை இன்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.யான ஆர்.வைத்திலிங்கம் பேசினார்.
இது குறித்து மாநிலங்களவையின் அதிமுக எம்.பி.யான ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:
''தமிழ்நாடு விவசாயிகளுக்கு விவசாய ஊக்க நிதி உதவியை வழங்க வேண்டியது அவசியம். தமிழ்நாடு தண்ணீர்ப் பற்றாக்குறையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறையில் விவசாயிகளின் துயரங்களை அகற்றும் வகையில் நெல்விதைப் பெருக்க திட்டம், விவசாய இயந்திரமயத் திட்டங்கள், நில மேம்பாட்டுத் திட்டங்கள் என பல திட்டங்களை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. நபார்டு வங்கியின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆய்வு, இந்தியாவில் ஒரு வேளாண் குடும்பத்தின் சராசரி மாதாந்திர வருமானம் ரூ8931 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் இது ரூ.9716 ஆக உள்ளது. தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள விவசாயிகள் ஆதரவுத் திட்டங்களின் விளைவாகவே இந்த முன்னேற்றம். எனினும், மாநில அரசின் ஆதாரங்கள் மிகக் குறைவு என்பதால் தமிழ்நாட்டின் விவசாயிகளின் நிலைமையை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது உடனடித் தேவையாகும்.
விவசாயிகளின் வருமானத்தில் சுமார் 80 சதவிகிதம், பயிரிடும் செலவுகளுக்கும் சந்தைக்கு அறுவடையை எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவுகளுக்கும் சென்றுவிடுகிறது. வருமானத்தில் எஞ்சிய 20 சதவிகிதம், வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்துவதில் கழிந்துவிடுகிறது.
கடினமாக உழைத்த விவசாயிகளின் கைகளில் மிஞ்சுவது இறுதியில் ஒன்றுமில்லை. வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை தொடங்கி வெள்ளப்பெருக்கு வரை பல இயற்கை சீற்றங்கள், பூச்சிகளின் தொல்லை தொடங்கி அறுவடையான பயிருக்கு கிடைக்கும் அடிமாட்டு விலைகள் என பலவகை இன்னல்களை தமிழ்நாட்டின் விவசாயிகள் சந்தித்துவருகின்றனர்.
எனவே விவசாயிகள் லாபம் பெறும் நோக்கில் விவசாயம் தொடர்பான இந்த நிலைமையை விரைவில் சரிசெய்யும் வகையில் அரசு கவனம் செலுத்தவேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து ஊக்கத்தொகைகளையும் வழங்கவேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயம்.
நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு அனைத்தும் உள்ளடங்கிய பயிர் ஊக்கத்தொகை வழங்குவது விவசாயிகளின் தன்னம்பிக்கையை அதிகரித்து விவசாய உற்பத்தியைப் பெருக்க உதவும். தமிழ்நாட்டு விவசாயிகள் சந்திக்கும் மிக மோசமான நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு விவசாய ஊக்க நிதியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தார்.