

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில், பாதிக்கும் வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பல்வேறு மனுக்கள் மீது பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு 129 பக்கத்தில் மத்திய அரசு இன்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைச்சக இயக்குநர் பி.சி.ஜோஷி இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மதரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகி 2014-ம் ஆண்டுக்கு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியா வந்துள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால், முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படவில்லை.
இந்த சட்டத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர் சாய்ராம் ரமேஷ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்து, அசாசுதீன் ஒவைசி, சிபிஐ, பீஸ் கட்சி உள்ளிட்ட ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்தமனுவில் " மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. அதன் மீதான தாக்குதல் இதைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தின.
இந்த மனுவைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர். காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த சட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர் அதேசமயம், மத்திய அரசு இதில் பதில் அளிக்கக் கடந்த டிசம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டனர்.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைச்சக இயக்குநர் பி.சி.ஜோஷி இன்று 129 பக்கத்தில் பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில், " குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் அடிப்படை உரிமைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இந்த சட்டம் இல்லை.
அதேசமயம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமை வழங்க சிஏஏ சட்டத்தில் புதிதாக எந்த அதிகாரமும் இல்லை. சட்டத்தின் அடிப்படையில்தான் குடியுரிமை வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது