

கரோனா வைரஸ் பீதி பரவி வரும் நிலையில் உலகின் மிக முக்கிய சுற்றுலா ஸ்தலமான தாஜ்மகால் வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் உலகின் மிக முக்கிய சுற்றுலா ஸ்தலமான தாஜ்மகால் வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக தாஜ்மகால் விளங்குகிறது.
குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாள்தோறும் அதிகஅளவில் தாஜ்மகாலுக்கு வருகை தருகின்றனர். தாஜ்மகாலை சுற்றுப் பார்க்க வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.