Last Updated : 16 Mar, 2020 09:53 PM

 

Published : 16 Mar 2020 09:53 PM
Last Updated : 16 Mar 2020 09:53 PM

கரோனா வைரஸ் அச்சறுத்தல்; 32 ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, துருக்கியிலிருந்து பயணிகள் நுழையத் தடை: நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு - மத்திய அரசு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 32 ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், இங்கிலாந்து, துருக்கி நாடுகளிலிருந்தும் பயணிகள் வருவதற்கு வரும் 18-ம் தேதி முதல் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஐரோப்பாவில் தடையில்லா வர்த்தகத்தில் ஈடுபடும் லீசடென்ஸ்டைன், ஐஸ்லாந்து, நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் இருந்தும் பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, கலாபுர்க்கியில் இருவர் இறந்துள்ளனர். இருப்பினும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 5,200 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 10 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு முக்கியக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

  • ஐரோப்பிய யூனியன் உள்ள 32 நாடுகளில் இருந்து வரும் 18-ம் தேதி முதல் இந்தியாவுக்குள் பயணிகள் வரத் தடை விதிக்கப்படுகிறது.
  • ஐரோப்பிய தடையில்லா வர்த்தக நாடுகள், துருக்கி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் 18-ம் தேதி முதல் பயணிகள் இந்தியாவுக்குள் வரத் தடை செய்யப்படுவார்கள்.
  • இந்த நாடுகளில் இருந்து எந்த விமான நிறுவனமும் இந்தியாவுக்கு 18-ம் தேதி இரவு 12 மணி முதல் பயணிகளை அழைத்துவரக்கூடாது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தற்காலிகமானவைதான். மார்ச் 31-ம் தேதி வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
  • நாடு முழுவதும் அனைத்துக் கல்வி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அருங்காட்சியகங்கள், கலாச்சார, சமூக மையங்கள், நீச்சல் குளம், திரையரங்குகள் அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்படுகிறது.
  • மாணவர்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தேவைப்பட்டால், ஆன்லைன் மூலம் கல்வி கற்க அறிவுறுத்தப்படுகிறது.
  • மக்கள் அனைவரும் அத்தியாவசியமின்றிப் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் போன்றவற்றில் பயணிக்கும்போது சக பயணியோடு தொலைவைக் கடைப்பிடிக்கவும். போக்குவரத்துக்குப் பயன்படும் வாகனங்கள், ரயில்கள், விமானங்களில் அதிகமான சுத்தத்தைப் பராமரிக்கவும்.
  • ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முறையான கை கழுவும் திரவம் வழங்கப்பட வேண்டும்.
  • ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் அமரும் வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமர வைக்க வேண்டும். காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்து இடம் வழங்க வேண்டும். முடிந்தவரை வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் இடைவெளியைக் கடைப்பிடித்து அமர வேண்டும்.
  • மாநில அரசுகள், உள்ளூர் நிர்வாகிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் அமைப்புகளுடன் பேசி, போட்டிகளை நடத்துவதை ஒத்திவைக்கலாம் அல்லது மக்கள் வரவிடாமல் போட்டிகளை நடத்துமாறு கேட்டுக்கொள்ளலாம்.
  • அனைத்து மதத் தலைவர்களுடன் அரசு அதிகாரிகள் பேசி, மக்கள் கூட்டமாக மதவழிபாட்டுத் தலங்களில் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளலாம்.
  • வர்த்தக அமைப்புகள், கடை உரிமையாளர்கள் ஆகியோருடன் பேசி வேலை நேரத்தை முறைப்படுத்த அதிகாரிகள் முயல வேண்டும்.
  • மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஒலிப்பெருக்கியில் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் அறிவிக்க வேண்டும். எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது போன்றவற்றை ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட், தபால் நிலையங்கள், போன்றவற்றில் மக்களுக்கு அறிவிக்கலாம்.
  • தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் அனுமதிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எது சாதகமாக இருக்கிறதோ அந்த முடிவை எடுக்கலாம்.
  • அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டங்கள், முக்கிய முடிவுகள் எடுக்கும்போது காணொலி மூலம் உரையாடி எடுக்கலாம். கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்தால், இந்த போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தேவைப்பட்டால் இன்னும் அதிகரிக்கப்படும்.
  • கரோனா வைரஸ் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிய ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் அனைத்தும் வரும் 18-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x