

டெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்த கலவரத்தில் உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொல்லப்பட்ட வழக்கில், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த கவுன்சிலர் தாஹிர் உசேன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த மாத இறுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது வகுப்புவாதக் கலவரமாக மாறியது.
இந்தக் கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் சாந்த் பாக் பகுதியில் உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா, உடலில் ஏராளமான காயங்களுடன் கழிவுநீர் ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சில் தாஹிர் உசேன் மீது சந்தேகம் இருப்பதாக அங்கித் சர்மாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்தப் புகார் தொடர்பாக தாஹிர் உசேன் வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் ஏராளமான கற்கள், பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து தாஹிர் உசேனை கட்சியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சஸ்பெண்ட் செய்தது.
அங்கித் சர்மா கொலை வழக்கை விசாரித்த வந்த டெல்லி போலீஸார், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனை இன்று கைது செய்தனர்.
இவரை டெல்லி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். தாஹிர் உசேனை 5 நாட்கள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு நீதிபதி பவன் சிங் ராஜாவத் அனுமதியளித்தார்.