

முதுகலை கணிதவியல் பட்டம் பெற்ற இளைஞர் சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக இருக்கிறார் என்றால், நாட்டின் வேலையின்மையைப் போக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதாவது:
எம்பிஏ படித்தவரும், மெக்கானிக்கல் எஞ்சினியரீங் படித்த இளைஞர் ஒருவர் ரயில்வே துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார், முதுகலை கணிதவியல் படித்த இளைஞர் சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக இருக்கிறார்.
நாட்டின் வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் வேலையின்மை நிலவரம் என்ன, வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது " எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் நாட்டின் வேலைவாய்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் துணைக் கேள்வி எழுப்பி வேலையின்மையைப் போக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்தார் அவர் பேசுகையில், " வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசின் ஏராளமான திட்டங்களை வழங்கி இருக்கிறது. வேலையின்மையைக் குறைக்க அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் படி 2015ம் ஆண்டில் 4.35 கோடி பேரும், 2016-ல் 4.34 கோடி பேரும், 2017-ம் ஆண்டில் 4.24 கோடி பேரும் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று மாநில யூனியன் பிரதேச வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.
கடந்த 2016 ஏப்ரல் முதல் 2017 அக்டோபர் வரையில் நாட்டின் வேலைவாய்ப்பு வழங்கும் விஷயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. 6.16 லட்சம் இளைஞர்கள் முக்கிய 8 துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
இவ்வாறு கங்குவார் தெரிவித்தார்