

கரோனா வைரஸ் பரவலை அடுத்து அனைத்து சுற்றுலாத் தலங்களையும் இன்று முதல் மூடுவதாக அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் செய்திக் குறிப்பு:
“கோவிட்-19 கரோனா வைரஸ் பரவலையடுத்து, அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய முடிவை எடுத்துள்ளது. கடற்கரைகள், சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்கள், நீர் விளையாட்டுகள் ஆகியவை இன்று (மார்ச் 16) முதல் மூடப்பட்டிருக்கும்.
தீவுகளில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் இன்று (மார்ச் 16) முதல் இம்மாதம் 26-ம் தேதி வரை மூடுமாறு அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வராமல் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடற்கரைகள், சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்கள், நீர் விளையாட்டு நடவடிக்கைகள் ஆகிய அனைத்துச் சுற்றுலா செயல்பாடுகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. அனைத்துச் சுற்றுலா இயக்குனர்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதனைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்”.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.