Last Updated : 16 Mar, 2020 04:03 PM

 

Published : 16 Mar 2020 04:03 PM
Last Updated : 16 Mar 2020 04:03 PM

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது: முதல்வர் கேசிஆர் தீர்மானத்தை முன்மொழிந்து பேச்சு

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் : கோப்புப்படம்

ஹைதராபாத்

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் முன்மொழிய, அவையில் விவாதிக்கப்பட்டு ஏகமனதுடன் நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இப்போது தெலங்கானா மாநிலமும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பேசியதாவது:

''மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) குறித்த உள்நோக்கத்தில் ஏராளமான சந்தேகங்கள் இருப்பதால்தான் போராட்டம் நடக்கிறது.

சகிப்பின்மை இல்லாத சிந்தனை இந்த நாட்டுக்கு நல்லதல்ல. நாடு இதை ஏற்காது. எனக்குக் கூட பிறப்புச் சான்றிதழ் இல்லை. என்னுடைய பெற்றோர் பிறப்புச் சான்றிதழை அளிக்க முடியாத சூழலில் என்பிஆரை கடுமையாக எதிர்க்கிறோம்.

கடந்த 2018-19 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், என்ஆர்சி தயாரிப்பதற்கான முதல்கட்ட தயாரிப்புப் பணிதான் என்பிஆர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசை நம்பிச் செயல்பட யாரும் தயாரில்லை. யார் உண்மை பேசுகிறார்கள். உள்துறை அமைச்சர் பேசுகிறாரா அல்லது அறிக்கை உண்மை பேசுகிறதா?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது குடியுரிமைத் திருத்தச் சட்டம். ஒரு குறிப்பிட்ட சமூகத்து மக்களை ஒதுக்கி வைக்க முடியுமா, அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை.

இது இந்துக்கள், முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினை அல்ல. இது நாட்டின் எதிர்காலம் தொடர்புடையது. சர்வதேச அளவில் இந்தியாவின் கவுரவம் தொடர்புடையது.

யாரேனும் சிஏஏவுக்கு எதிராகப் பேசினால் பாகிஸ்தான் ஆதரவாளர், துரோகி என்று பேசுகிறார்கள். சிஏஏவுக்கு எதிராக இப்போது தெலங்கானா சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவேற்றுகிறது. அப்படியென்றால், நாங்கள் தேசத் துரோகிகளா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தபோது டெல்லியில் நடந்த கலவரத்தில் 50 உயிர்கள் போனது வேதனையளிக்கிறது. எம்.பி.க்களும் அமைச்சர்களும் போராட்டத்தைத் தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.

கோலி மாரோ (சுட்டுத் தள்ளுங்கள்) என்ற வார்த்தையைப் பேசுகிறார்கள். என்ன விதமான மொழி இது. பண்பட்ட சமூகத்தினர் வசிக்கும் இந்தியா போன்ற நாட்டில் இதுபோன்ற முட்டாள்தனத்தைப் பொறுக்க முடியாது.

வாக்காளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு வாக்காளர்களின் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டினால்கூட அவர்களைக் குடிமகன்களாக ஏற்க முடியாது என்று கூறுவது வியப்பாக இருக்கிறது.

ஓட்டுநர் உரிமம் செல்லாது, ஆதார் செல்லாது, ரேஷன் கார்டு செல்லாது, பாஸ்போர்ட் கூட செல்லாது. அப்படி என்றால் எதை வைத்து குடியுரிமையை நிரூபிப்பது?

நாட்டின் பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் ஊறு விளைந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். ஊடுருவல்காரர்களை எப்போதும் நாங்கள் வரவேற்கவில்லை. நாட்டின் அமைதிக்கு யாரும் குந்தகம் விளைவிக்கவிடமாட்டோம்.

அனைத்துக் கட்சிகளையும், வல்லுநர்களையும் அழைத்து தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசு விவாதித்து முடிவெடுக்க வேண்டும்''.

இவ்வாறு சந்திரசேகர் ராவ் பேசினார்.

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் சார்பில் அக்பரூதின் ஒவைசியும் பேசி நன்றி தெரிவித்தார். விவாதத்துக்குப் பின், தீர்மானம் நிறைவேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x