

ம.பி. சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காத நிலையில் பாஜக எம்ல்ஏக்கள் ஆளுநர் மாளிகையில் அணிவகுத்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்திலும் பாஜக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்பதவி விலகினர். இதனால் அக்கட்சியின் பலம் 114-ல் இருந்து 92 ஆககுறைந்தது. இதையடுத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் முதல்வர் கமல்நாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘அரசியல் சாசன சட்டத்தின் 174 மற்றும் 175(2) ஆகிய பிரிவுகளின் கீழ், 16-ம் தேதி (இன்று) சட்டப்பேரவை கூட்டத் தொடர் எனது உரையுடன் தொடங்கும். எனது உரை முடிந்ததும் நீங்கள் (முதல்வர்) பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும். இந்த நடைமுறைகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.’’ எனக் கூறியிருந்தார்.
ஆனால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து பேரவைத் தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
சட்டப்பேரவை இன்று கூடும் என ஆளுநர் அறிவித்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்று போபால் திரும்பினர். எனினும் அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்லவில்லை. ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்தது.
இந்த பரபரப்பான சூழலில் ம.பி. சட்டப்பேரவை இன்று கூடியது. காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்து சேர்ந்தனர். கரோனா வைரஸ் பீதி காரணமாக பலர் முககவசம் அணிந்து அவைக்கு வந்தனர்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுபடி ஆளுநர் லால்ஜி டாண்டன் உரையாற்றினார். அப்போது அவர் ஜனநாயக மரபுகள் படி செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவை மார்ச் 26-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து சபாநாயகர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதைத்தொடர்ந்து ம.பி. முதலவர் கமல்நாத் ஆளுநர் லால்ஜி டான்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் 106 பேரும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று அணிவகுத்தனர். எம்எல்ஏக்களின் பட்டியலை வழங்கியதுடன் ஆளுநருடன் எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சவுகான் ‘‘கமல்நாத் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதால் ஆட்சியில் இருக்கும் உரிமையில்லை. எனவே உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்திலும் பாஜக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.