

நாடாளுமன்றத்தில் ஒரு விவகாரத்தில் துணைக் கேள்வி கேட்கக் கூட சபாநாயகர் எனக்கு அனுமதி மறுக்கிறார். எம்.பி.யான நான் பேசுவதற்கு உரிமை இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி நேரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், "வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் 500 பேரின் பட்டியல், முதல் 50 பேரின் பெயர்ப் பட்டியலை அரசு வெளியிட வேண்டும். அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க அரசு என்ன மாதிரியான முயற்சிகளை, நடவடிக்கைகளை எடுத்துள்ளது?
இந்திய வங்கிகளில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியவர்கள் இந்தியாவுக்கு எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
அப்போது நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுந்து பதில் அளிக்கையில், "கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்ப் பட்டியல் சிஐசி இணையதளத்தில் இருக்கிறது. எதையும் அரசு மறைக்கவில்லை.
கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் கடன் பெற்றவர்கள். இந்தக் கேள்வி கேட்டவர், இதுகுறித்துப் புரிதல் இல்லாமல் கேட்டுள்ளார். நாங்கள் ஒன்றும் ஓவியங்களை விற்கவில்லை" எனத் தெரிவித்தார்.
யெஸ் வங்கி நிறுவனரிடம் ரூ.2 கோடிக்கு பிரியங்கா காந்தி ஓவியங்கள் விற்பனை செய்ததை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார் அனுராக் தாக்கூர்.
அனுராக் தாக்கூர் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து நீதி வேண்டும் என்று கோஷமிட்டனர்.
அப்போது ராகுல் காந்தி எழுந்து தன்னுடைய கேள்வியில் துணைக் கேள்வியைக் கேட்க எழுந்தார். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நான் கேட்ட ஒரு கேள்வியில் துணைக் கேள்வி கேட்க எழுந்தால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கிறார். அவரின் செயல் என்னைப் பாதித்துள்ளது. எம்.பி.யின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது சபாநாயகரின் கடமை. துணைக் கேள்வி கேட்பது என்னுடைய உரிமை.
கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களை வெளியிடுங்கள் என்று கேட்ட கேள்விக்குத் துணைக் கேள்வி கேட்க அனுமதிக்கவில்லை. இது என்னுடைய உரிமையைப் பறிக்கும் செயலாகும். கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் 50 பேரின் பெயர்களை வெளியிட அரசு ஏன் தயங்குகிறது" எனக் கேள்வி எழுப்பினார்.