பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: மகளிர் அமைப்புகள் வரவேற்பு

பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: மகளிர் அமைப்புகள் வரவேற்பு
Updated on
1 min read

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதற்கு, மகளிர் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010-ம் ஆண்டு நடை பெற்ற பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் 198 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியில் 64 வார்டுகளில் மகளிர் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அதன்படி பாஜகவில் 31 பேரும், காங்கிரஸில் 22 பேரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் 8 பேரும், சுயேட்சையாக 3 பேரும் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்நிலையில் வருகிற 22-ம் தேதி பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதால், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் 198 வார்டுகளைக் கொண்டு மாநகராட்சியில் 98 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப் பட்டுள்ளன‌.

எனவே பெண் வாக்காளர்களை குறி வைத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் அறிக்கையை தயாரித்து வரு கின்றனர். மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத‌ இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் பெங்களூருவில் உள்ள மகளிர் அமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மகளிர் மாற வேண்டும்

இதுதொடர்பாக பெங்களூ ருவை சேர்ந்த பெண்ணிய சிந்தனையாளர் சிந்தியா மார்க், 'தி இந்து'விடம் கூறியதாவது: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வரலாற்றில் மகளிருக்கு அதிக பட்சமாக 50 சதவீத இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான். நீண்ட போராட்டத்துக்கு பிறகு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.

வழக்கமாக காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற பெரிய கட்சிகள், ஒரு குறிப்பிட்ட பகுதியில் செல் வாக்காக இருக்கும் ஆண்களை தான் வேட்பாளராக‌ தேர்வு செய்யும். இந்த முறை அந்த தொகுதி மகளிர் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ஆண் வேட்பாளர் தனது மனைவிக்கோ, சகோதரிக்கோ, அம்மாவுக்கோ தான் அந்த இடத்தை பெற்று தருவார். இதில் வெற்றி பெறும் பெண் ரப்பர் ஸ்டாம்ப்பாக மட்டுமே இருப்பார். உண்மையான உறுப்பினராக ஆணே செயல்படுவார்.

இந்த நிலை மாற வேண்டுமென்றால், மகளிர் மாற வேண்டும். வெற்றி பெறும் மகளிர் வீட்டை விட்டு வெளியே வந்து, அவையில் மகளிரின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்காக எதையேனும் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in