Last Updated : 15 Mar, 2020 06:33 PM

 

Published : 15 Mar 2020 06:33 PM
Last Updated : 15 Mar 2020 06:33 PM

'தயாராக இருக்கணும், பயப்படக்கூடாது' ;கரோனாவை எதிர்கொள்ளும் மந்திரம்: சார்க் தலைவர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி பேச்சு

கரோனாவை எதிர்கொள்ளும் எங்களின் மந்திரம் என்பது தயாராக இருத்தல் வேண்டும், பதற்றமடையவோ, அச்சப்படவோ கூடாது என்று பிரதமர் மோடி காணொலி மூலம் சார்க் நாடுகளின் தலைவர்களுடன் உரையாற்றினார்

உலகம் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கரோனா வைரஸால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து கரோனா வைரஸ் குறித்த பாதிப்பை எவ்வாறு எதிர்கொள்வது, அதிலிருந்து மீள்வது, தயாராவது குறித்து சார்க் நாடுகள் ஆலோசிக்க வேண்டும், ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பெயரில் சார்க் நாடுகளின் தலைவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலம் இணைந்து பிரதமர் மோடியுடன் இணைந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த காணொலிச் சந்திப்பில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பாகிஸ்தான் பிரதமருக்கான சிறப்பு உதவியாளர் ஜாபர் மிர்ஸா ஆகியோர் இணைந்தனர்.
இந்த காணொலியில் பிரதமர் மோடி பேசுகையில், " கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து எவ்வாறு மீள்வது, எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க வந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. நேபாள பிரதமர் சர்மா ஒலி சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

தெற்காசிய மண்டலத்தில் இதுவரை 150க்கும் குறைவாகவே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கரோனா வைரஸை எதிர்கொள்ளும் எங்களின் தாரக மந்திரம் என்பது தயாராக வேண்டும், பதற்றமோ அச்சப்படவோ கூடாது என்பதுதான். இந்த மந்திரத்தின் அடிப்படையில்தான் இந்தியா இயங்குகிறது.

ஜனவரி மாதத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் அனைவரையும் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்புதான் அனுமதிக்கிறோம். படிப்படியாகப் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளோம்.

படிப்படியாக நாம் எந்தநடவடிக்கையையும் எடுப்பது பதற்றமடைவதைத் தவிர்க்கும், இதுபோன்ற நோய்களில் இருந்து காக்க சிறப்புக் குழுக்களை இந்தியா அமைத்துள்ளது. பல்வேறு நாடுகளில் சிக்கி இருந்த 1400 -க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுள்ளோம். இதில் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களையும் மீட்டுள்ளோம்.

நம்முடைய அனைத்து நாட்டு மக்களும், சமூகத்தினரும் ஒன்றோடு தொடர்புடையவர்கள், ஆழ்ந்த பிணைப்பு கொண்டவர்கள். ஆதலால் ஒருங்கிணைந்து கரோனாவை எதிர்க்கத் தயாராக இருப்போம், ஒருங்கிணைந்து செயல்படுவோம், வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்தார்

சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பேசுகையில், கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காப்பது, எடுக்கும் நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து கலந்தாய்வு செய்யக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய முயற்சி எடுத்த பிரதமர் மோடிக்குப் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x