Published : 15 Mar 2020 03:47 PM
Last Updated : 15 Mar 2020 03:47 PM

கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வேலையிழப்புகள் எவ்வளவு தெரியுமா?, திசைத்திருப்பும் அரசியல்தான் நடக்கிறது: கண்ணையா குமார் விமர்சனம்

ஜே.என்.யு முன்னாள் மாணவர் தலைவரும் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான கண்ணையா குமார் டெல்லி வன்முறை, வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்செல்லாம் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசைத்திருப்பவே என்று தெரிவித்துள்ளார்.

ஆங்கில இதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் டெல்லி வன்முறையில் அவ்வளவு பேர் பலியானது குறித்த கேள்விக்குப் பதில் கூறும்போது, “டெல்லியில் என்று இல்லை அவர்கள் எங்கிருந்தாலும் கொல்லப்படுவார்கள். மனிதர்களை கலவரக்காரர்களாக மாற்றுகின்றனர்.

தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் ஆகியவை மூலம் வேகமாகப் பரவும் பொய்ச்செய்திகள், வன்முறையான வெறுப்புப் பேச்சுக்கள் எங்கு வேண்டுமானாலும் எப்போதும் இவை நடக்கவே செய்யும்.

மக்களை இது போன்ற எதிர்மறை விஷயங்களில் கவனம் செலுத்த வைப்பது, ஈடுபடுத்துவது அரசுக்கு முக்கியமானதாகும். அப்போதுதான் முக்கியமான அடிப்படை விவகாரங்களை, பிரச்சினைகளை அவர்களிடமிருந்து திசைத் திருப்ப முடியும். வலிநிறைந்த உண்மை என்னவெனில் சமீபத்திய ஆய்வின் படி ஒவ்வொரு மணிக்கும் ஒரு வேலையில்லா இளைஞர் உயிரை மாய்த்துக் கொள்கிறார் அல்லது உடல்நலம் பாதிக்கப்படுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் 3.16 கோடி வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மேலும் 18 லட்சம் வேலையிழப்புகள் ஏற்படும்.

ஜிடிபி வளர்ச்சி 4.7% ஆக சரிந்துள்ளது. இதோடு உண்மையான வேலையின்மை புள்ளி விவரங்களையும் அரசு வெளியிட மறுக்கிறது. ஏதோ நகரங்களில் புதிது புதிதாக அடிப்படை வசதிகள் இன்றி பேட்டைகள் உருவாகின்றன. இந்த நிலையில் கரோனா அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. இன்று மக்களின் வாழ்வு, இருப்பு குறித்த கேள்விகள் எப்படிக் கையாளப்படுகின்றன என்பதைப் பாருங்கள். இவையெல்லாம் காலங்காலமாக இருந்து வருவதே என்பார்கள். ஆனால் 21ம் நூற்றாண்டிலும் சில விஷயங்கள் 70 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டுமா என்ன? சில விஷயங்கள் மாறத்தான் வேண்டும். புதிய சவால்கள், வாழ்க்கை குறித்த புதிய கேள்விகள் உருவாக வேண்டும். எத்தனை நாட்களுக்குத்தான் செய்த தவறுகளையே செய்து கொண்டிருக்கப் போகிறோம்.” என்றார் கண்ணையா குமார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x