

லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி யில் ஈடுபட்டதால் நாடாளு மன்ற இரு அவைகளும் முடங்கின.
லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் ஆகிய பிரச்சி னைகளை வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 25 காங்கிரஸ் எம்பிக்களை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடந்த வாரம் இடை நீக்கம் செய்தார். இதைக் கண்டித்து கடந்த வாரம் முழுவதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் மக்களவையை புறக்கணித்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக மேலும் சில கட்சிகள் அவையை புறக்கணித்த நிலையில், சில கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இந்நிலையில் காங்கிரஸ் எம்பிக்களின் இடைநீக்கம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் நேற்று மக்களவைக்கு வந்தி ருந்தனர்.
நேற்று காலையில் அவை கூடியதும் பூடானிலிருந்து வந்துள்ள நாடாளுமன்றக் குழுவை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வரவேற்றார். பின்னர் பிரபல வங்க மொழி திரைப்பட நடிகர் ஜார்ஜ் பேக்கர் மக்களவையின் நியமன உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் கோயில் திருவிழாவில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 11 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது,
“கடந்த வாரம் மக்களவையில் எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் லலித் மோடி விவகாரம் குறித்து சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரது அறிக்கையால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது” என்றார். அப்போது, அவையின் மையப்பகுதியில் திரண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கையில் பதாகையை ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். அப்போது சில இடதுசாரி உறுப்பினர்களும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்றனர். ஆனால் கோஷம் எழுப்பவில்லை.
இதற்கிடையே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள், பதாகைகளை ஏந்தியபடி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அமளி நிலவியதால், அவை முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆலோசனை கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், அவையை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
மீண்டும் அவை கூடியபோதும் லலித் மோடிக்கு உதவிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் வியாபம் ஊழல் தொடர்பாக 48 பேர் பலியாகி உள்ள நிலையில் இதுகுறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதை யடுத்து கூச்சல் குழப்பம் நிலவி யதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அமளிக்கு நடுவே மக்கள வையில் சில அலுவல் களை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
விதியின்படி அவையில் அமைதியான சூழல் நிலவாத போது எந்த ஒரு அலுவலையும் மேற்கொள்ளக் கூடாது என மக்க ளவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரி வித்தார்.
மாநிலங்களவையில்…
பிஹார் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங் களுக்கும் முதல்வரை கலந்தா லோசிக்காமல் புதிய ஆளுநர்களை நியமித்தது மற்றும் வடகிழக்கில் உள்ள பிற மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் நாகா அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் நேற்றும் எந்த அலுவலும் நடை பெறவில்லை. இதுபோல லலித் மோடி, வியாபம் ஊழல் பிரச்சி னைகளை முன்னிறுத்தி காங்கி ரஸார் அமளியில் ஈடுபட்டனர்.
‘விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும்’
மக்களவை கூட்டத்துக்கு நடுவே, முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியதாவது: குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கும், குற்றம் சுமத்துபவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் தங்கள நிலை குறித்து விளக்கம் அளிக்க உரிமை உண்டு. எனவே, நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். காங்கிரஸ் கட்சி போராட்டத்தை நிறுத்தாவிட்டால் அதற்கு ஆதரவு அளிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.