

அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ள மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கிறது.
கடந்த ஒருவாரமாக ஜெய்ப்பூரில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனி விமானம் மூலம் போபால் நகருக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டு நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல் நாத்துக்கும், மூத்த தலைவர் ஜோதிர்ராதித்யா சிந்தியாவுக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. முதல்வர் பதவியை கைப்பற்றுதலில் இருந்த மோதல் பெரிதானதையடுத்து, ஜோதிர்ராதித்தியா கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ஜோதிர்ராதித்யா சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். ஜோதிர்ராதித்யா சி்ந்தியா பாஜகவில் இணைந்துவிட்டார்.
இதனால், 228 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 92 ஆகக் குறைந்தது. இந்த 22 எம்எல்ஏக்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகருக்கும், ஆளுநருக்கும் அளித்தனர்.
இதில் 6 பேரின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். மீதமுள்ள 16 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை.
இதனால் 228 எம்எல்ஏக்கள் கொண்ட அவையில் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டதால், அவையின் பலம் 222 ஆகக் குறைந்துள்ளது. 222 உறுப்பினர்கள் அவையில் இருப்பதால் பெரும்பான்மையை நிரூபிக்கக் காங்கிரஸ் கட்சிக்கு 112 எம்ஏல்ஏக்கள் ஆதரவு தேவை.
காங்கிரஸ் கட்சியிடம் 92 எம்எல்ஏக்கள் உள்ளனர், மேலும், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்தால் 99 எம்எல்ஏக்களாக பலம் அதிகரிக்கும். இன்னும் பெரும்பான்மைக்குக் காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.
இதனால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது சபாநாயகர், எதிர்ப்பு எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா மீது என்ன முடிவு எடுப்பார் என்பதைப் பொறுத்து கமல்நாத் ஆட்சி தப்புவது முடிவு செய்யப்படும்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் கொறாடா பிறப்பித்த உத்தரவில் அனைத்து எம்எல்ஏக்களும் நாளை சபையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால், அந்த 16 எம்எல்ஏக்களும் வராவிட்டால் பதவி பறிபோகும் சூழல் இருக்கிறது. ஏனென்றால், 16 பேரின் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் அறிவிக்கவில்லை
பாஜகவிடம் தற்போது 107எம்எல்ஏக்கள் உள்ளனர், பெரும்பான்மைக்கு 5 எம்எல்ஏக்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. இதற்கிடையே பாஜக கட்சியின் தலைமைக் கொறடா எம்எல்ஏ நரோத்தம் மிஸ்ரா, நாளை அனைத்து எம்எல்ஏக்களும் சபையில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன் ஹரியானாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் போபால் நகரம் வரவில்லை. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன் வந்துவிடுவார்கள் எனத் தெரிகிறது.
இதற்கிடையே ஆளுநர் லால்ஜி டான்டன் உத்தரவின்படி நாளை காலை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் முன்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும். முதலில் ஆளுநர் லால்ஜி டான்டன் உரையாற்றுவார் அவரின் உரை முடிந்தபின், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்று பெறுவோம், ஆட்சியைத் தக்கவைப்போம் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கையாக இருக்கிறது. அதேசமயம், 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டதால், கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது, ஆதலால், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி கவிழ்வது உறுதி என்று பாஜக நம்புகிறது.
மத்தியப்பிரதேசத்தில் நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் கமல்நாத் அரசு தப்புமா அல்லது பாஜக அரசு அமையுமா என்பத தெரிந்துவிடும்.