

கரோனா வைரஸ் குறித்து தேவையற்ற வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் பரப்புவோர் கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று ஹைதராபாத் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றுக்கு தெலங்கானா அரசு மார்ச் 31-ம் தேதிவரை தடை விதித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் அஞ்சானி குமார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் நிருபர்களிடம் ஹைதராபாத்தில் கூறுகையில், " கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால், சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாக கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களையும், வதந்திகளையும் பரப்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறார்கள்.
அவ்வாறு கரோனா வைரஸ் குறித்து வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஓர் ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்க முடியும்.
மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்கள், எச்சரிக்கைகள், அதன் பாதிப்புகள், அதன் பரவல் குறித்து வதந்திகளைப் பரப்பினால் பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 58ன்படி கைது செய்யப்படுவார்கள் " எனத் தெரிவித்தார்
இதற்கிடையே முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் விடுத்த அறிவிப்பில், " ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத எந்த தகவலையும் கரோனா வைரஸ் குறித்து உடனடியாக ஏதும் செய்தி வெளியிட வேண்டாம். மாநில சுகாதாரத்துறை அறிவிக்கும் செய்திகள் குறித்து மட்டும் செய்தி வெளியிட்டால் போதுமானது. தவறான செய்திகளை வெளியிடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்