

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொடர்பான மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதாரத் துறையின் அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையின் வழி காட்டு நெறிகளையும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். அதில் கூறி யிருப்பதாவது:
வெளிநாட்டு பயணம் மூலமாகவே இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக் கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களது பயணத் தின்போது உடன் இருந்தவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந் தவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட வேண்டும்.
வைரஸ் காய்ச்சல் பாதிக்கப் பட்டவரை சந்திப்பவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படும் அபா யம் அதிகம் உள்ளது. குறிப்பாக ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் தொற்றும் அபாயம் அதிகம். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கழிப்பறை யுடன் கூடிய தனி அறையில் தங்கவைக்க வேண்டும். அந்த அறையில் காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். அவரை சந்திப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தொலைவுக்கு அப்பால் நிற்க வேண்டும்.
முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளை சந்திப்பதை காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அறவே தவிர்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. திருமணம், திருவிழா, துக்க நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அடிக் கடி சோப்பு போட்டு கைகளை நன்றாகத் தேய்த்து கழுவ வேண் டும். வீடுகளில் தட்டு, டம்ளர், துண்டு, போர்வை மற்றும் இதர பொருட்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஒவ்வொரு வரும் தனித்தனி பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
எப்போதும் முகக் கவசம் அணிந்துகொள்வது நல்லது. இந்த முகக் கவசத்தை 6 மணி முதல் 8 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய முகக் கவசத்தை மீண்டும் பயன்படுத் தக் கூடாது. காய்ச்சல் நோயாளிகள், அவரை கவனித்துக் கொள்பவர்கள் பயன்படுத்தும் முகக் கவசத்தை பிளீச் (5%), சோடியம் ஹைபோ குளோரைட் (1%) மூலம் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அந்த முகக் கவசத்தை எரித்துவிட வேண்டும் அல்லது ஆழமான குழியில் புதைத்துவிட வேண்டும்.
காய்ச்சல் அறிகுறிகள் தென் பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். 011-23978046 என்ற எண்ணிலும் உதவி கோரலாம்.
தனிமைப்படுத்தப்படும் வைரஸ் காய்ச்சல் நோயாளிகளை கவ னித்துக் கொள்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நோயாளிகளுடன் கைகுலுக்கக் கூடாது, தொடக் கூடாது. கையுறைகளை பயன் படுத்த வேண்டும். அவற்றை கழற்றிய பிறகு சோப்பு போட்டு கைகளை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். நோயாளிகளை யாரும் சந்திக்க அனுமதிக்கக் கூடாது. காய்ச்சல் நோயாளிகள் 28 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.
நோயாளிகள் தங்கியிருக்கும் அறையை தூய்மையாகப் பரா மரிக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் போர்வை, மேஜை களை சோடியம் ஹைபோ குளோரைட் (1%) மூலம் சுத்தம் செய்ய வேண்டும். நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறையை பிளீச், பினாயில் போட்டு நாள் தோறும் சுத்தம் செய்ய வேண்டும். நோயாளிகளின் ஆடைகளை தனியாக துவைக்க வேண்டும்.
நோயாளிகளை சந்தித்த நபர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். ரத்தப் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.