

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய ஜோதிராதித்ய சிந்தியா போபாலில் காரில் சென்ற போது அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது, இது தொடர்பாக அடையாளம் தெரியாத 35 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை விமானநிலையம் சென்று கொண்டிருந்த போது காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து நேற்று நள்ளிரவு பாஜக தொண்டர்கள் ஷியாமளா ஹில்ஸ் காவல் நிலையம் அருகே காங்கிரஸார் சிந்தியா காரை மறித்ததோடு அவரை தாக்கவும் செய்ததாகப் புகார் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கறுப்புக் கொடி காட்டிய காங்கிரஸார் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று பாஜக தரப்பு போலீஸாருக்கு நெருக்கடி அளித்தனர்.
“30-35 அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 341 (தவறாகத் தடுத்து நிறுத்துதல்) மற்றும் 147(கலவரம் செய்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் வெள்ளியன்று கூறும்போது, ‘சிந்தியா மீது உயிருக்குச அச்சுறுத்தலான தாக்குதல்’ நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.
பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்த மாநில காங்கிரஸ் செயலர் அப்துல் நபீஸ் கூறும்போது, “காங்கிரஸ் தொண்டர்கள் அமைதியாகத்தான் கறுப்புக் கொடி காட்டினர், பாஜக அரசியல் செய்கிறது. சிந்தியாவுக்கு எதிராக பாஜகவும் ஆர்பாட்டம் இதற்கு முன்னால் நடத்தவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் “கட்சியை அவமதித்து விட்டார் சிந்தியா, இதனால் தொண்டர்கள் அவர் மீது கடுப்பில் இருக்கின்றனர் என்றா பாஜக தலைவர்கள் அளித்த நெருக்கடிக்கு போலீஸார் அடிபணிந்து காங்கிரஸார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்றார் அப்துல் நபீஸ்.