

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தபோதிலும், மத்திய அரசின் கலால் வரி அதிகரிப்பால், பெட்ரோல், டீசல் விலை வரும் நாட்களில் அதிகபட்சமாக ரூ.4 வரை உயர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பின் படுவீழ்ச்சி அடைந்து பேரல் ரூ.36 டாலராகக் குறைந்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டு வந்தது. இதனால் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திடீரென பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தி மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் மற்றும் கலால் வரித்துறை உத்தரவின்படி, "பெட்ரோல் மீதான சிறப்பு வரி லிட்டருக்கு 2 ரூபாயும், டீசலில் 4 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக பெட்ரோல், டீசல் மீதான சாலை வரியும் லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் புதிய வரி உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த வரி உயர்வால் இந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை மட்டுமே கிடைக்கும். ஆனால், அடுத்த நிதியாண்டில் ரூ.45 ஆயிரம் கோடி கூடுதலாகக் கிடைக்கும்.
மத்திய அரசு தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி இருப்பதால், அதை ஈடுகட்டும் வகையில் பல்வேறு மாநிலங்களில் வரி உயர்த்தப்படும் பட்சத்தில் சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் ஆகிய இரு எரிபொருட்களின் விலையிலும் அதிகபட்சமாக ரூ.3 முதல் ரூ.4 வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 15 மாதங்களில் மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டும் விதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.77 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.13.47 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு கலால் வரி மூலம் ரூ.99 ஆயிரம் கோடி ஈட்டிய நிலையில் 2016-17-ம் ஆண்டில் இது ரூ.2.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபரில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டில் லிட்டருக்கு ரூ.1.50 பைசா குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் முதல் 2016-ம் ஆண்டு ஜனவரி வரை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 9 முறை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சர்வதேசச் சந்தையில் விலைச் சரிவைக் கச்சா எண்ணெய் சந்தித்தபோதெல்லாம், அந்தப் பலனை மக்களுக்குக் கிடைக்கவிடாமல், மத்திய அரசு வரியாக எடுத்துக்கொண்டது.