கரோனா பீதி: பெங்களூரில் நடக்க இருந்த ஆர்எஸ்எஸ் உயர்மட்டக் கூட்டம் ரத்து

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் : கோப்புப் படம்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் : கோப்புப் படம்.
Updated on
1 min read

பெங்களூருவில் நடக்க இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர் மட்ட அளவில் முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதி சபா (ஏபிபிஎஸ்) கூட்டம் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 100 நாடுகளுக்கும் அதிகமாகப் பரவியுள்ள கரோனா வைரஸால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 83 பேர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் ஒவ்வொரு மாநில அரசும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முக்கியமாக திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பள்ளி கல்லூரிகளை மூடவும் பல்வேறு மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 15-ம் தேதி (நாளை) முதல் 17-ம் தேதி வரை ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் மிக முக்கியமானதாகும்.

ஆனால், தற்போது நாடு முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவுரைகளையும் அளித்துள்ளன. அதை வரவேற்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் நடக்க இருந்த அகில பாரதிய பிரதிநிதி சபாவின் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.

அனைத்து ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் மக்கள் மத்தியில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, கரோனா சவாலை முறியடிக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் 1500 நிர்வாகிகள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெங்களூருவில் ஏற்கெனவே ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூடி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in