

கரோனா வைரஸ் பரவுவது தீவிரமடைந்துள்ளதையடுத்து, வரும் 16-ம் தேதி முதல் (திங்கள்கிழமை) இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அங்குத் தேசிய அவசர நிலையை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். மேலும், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 5000 கோடி அமெரிக்க டாலரையும் அவர் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள 50 மாநில அரசுகளும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுயமாக எடுக்கவும் அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "உலக அளவில் பரவி வரும் கரோனா வைரஸ் தீவிரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவிலும் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டு கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றம் இல்லாதவர்கள் அனைவருக்கும் விசா வழங்குவதை வரும் 16-ம் தேதி நிறுத்தப்படுகிறது.
விசாவுக்கு யாரேனும் விண்ணப்பம் செய்திருந்து அது நிலுவையில் இருந்தால், அது ரத்து செய்யப்படும். இந்தியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் விசா நடைமுறை செயல்பாட்டுக்கு வந்த பின், வழக்கம் போல் விசா வழங்குவதற்கான அனுமதி
வழங்கப்படும். அப்போது விண்ணப்பித்த அனைவருக்கும் மீண்டும் நினைவூட்டல் அனுப்பப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு அங்கு இதுவரை 41 பேர் பலியாகியுள்ளார்கள். 46 மாநிலங்களில் பரவி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.