

கங்கை நதியின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘கங்கை அழைக்கிறது’ என்ற பிரச்சார பயணம் கங்கையில் மேற்கொள்ளப்பட்டது. முப்படை வீரர்கள் பங்கேற்ற இந்தப் படகுப் பயணம் உத்தராகண்ட் மாநிலம் தேவபிரயாக்கில் கடந்த அக்டோபர் 10-ம் தேதி தொடங்கியது. மேற்கு வங்க மாநிலம் கங்கா சாகரில் நவம்பர் 12-ல் முடிந்தது.
இதில் பங்கேற்ற வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது:
நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றான கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் வெற்றி அடைந்துள்ளது. அந்த நதியின் தண்ணீர் தரம் உயர்ந்துள்ளது. கங்கையை போல நாட்டின் பிற நதிகளையும் தூய்மைப்படுத்தும் திட்டம், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும்.
நமது தாயை போன்ற கங்கையை பல ஆண்டுகளாக நாம் பாதுகாக்கத் தவறிவிட்டோம். ஆனால் கடந்த 2014-ல் பிரதமர் நரேந்திர மோடி தொங்கி வைத்த தூய்மை கங்கை திட்டம், அந்த நதியின் தண்ணீரின் தரத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கங்கை நதி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து 15 வயதுக்குட்பட்ட நமது குழந்தைகளுக்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தக் குழந்தைகள் அடுத்த 60-70 ஆண்டுகளில் கங்கையை பாதுகாப்பதில் வல்லவர்களாக இருப்பதை நாம் காணமுடியும்.
இவ்வாறு அமைச்சர் அமித்ஷா பேசினார்.- பிடிஐ