

திருப்பதி மற்றும் திருமலையில் கோவிட் - 19 வைரஸை பரவ விடாமல் தடுக்க தேவஸ்தானம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதல்கட்டமாக, காய்ச்சல், இருமல், தொடர் தும்மல் போன்ற உபாதைகள் உள்ளவர்கள் தயவு செய்து திருமலைக்கு வருவதை தவிர்க்குமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்தது.
அடுத்த கட்டமாக, வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்களை 28 நாட்கள் வரை சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டது.
இந்த சூழ்நிலையில், கோவிட் - 19 அறிகுறிகளாக கருதப்படும் நீண்டநாள் காய்ச்சல், இருமல், தும்மல் போன்றவை இருந்தால் அவர்களை திருப்பதி அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தி 'தெர்மல் ஸ்கேனர்' மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி, நேற்று காலை, அலிபிரி சோதனை சாவடியில் 'தெர்மல் ஸ்கேனர்' மூலம் பக்தர்களுக்கு மருத்துவப் பரிசோதனையை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் தொடங்கி வைத்தார்.
இந்த பரிசோதனை வாரிமெட்டு பகுதி வழியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கும் நடத்தப்படுகிறது. மேலும் பஸ், கார், இருசக்கர வாகனங்கள் மூலமாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கும் தெர்மல் ஸ்கேனர்மூலமாக மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
திரையரங்குகள் மூடல்
ஆந்திர மாநிலம் நெல்லூரில் சினிமா திரையரங்குகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன.