Published : 14 Mar 2020 08:52 AM
Last Updated : 14 Mar 2020 08:52 AM

வைரஸ் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை அமைக்க உதவ தயார்: கர்நாடக முதல்வருக்கு இன்போசிஸ் அறக்கட்டளை கடிதம்

கர்நாடகாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 700படுக்கைகளுடன் தனி மருத்துவமனை அமைக்க இன்போசிஸ் அறக்கட்டளை உதவும் என்று அந்த அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவாது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. 12 மாதங்களும் அதிக வெப்பம்நிலவும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது.

கர்நாடகாவில் அனைத்து மால்கள், திரையரங்குகள், ஏசி அறை கொண்ட பகுதிகளை உடனடியாக மூட வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும். மருந்தகங்கள், மளிகை கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்க வேண்டும்.

வைரஸ் காய்ச்சல் பரவினால் தனியார் மருத்துவமனைகளால் நிலைமையை சமாளிக்க முடியாது. எனவே கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஓர் அரசு மருத்துவமனையை தனியாக ஒதுக்க வேண்டும். அந்த மருத்துவமனையில் 500 முதல் 700 படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவ உபகரணங்கள்

மருத்துவமனை முழுவதும் ஆக்ஸிஜன் குழாய்களை பொருத்த வேண்டும். மருத்துவமனை கட்டமைப்புக்கான வசதிகளை ஏற்படுத்த இன்போசிஸ் பவுண்டேசன் உதவும். இதேபோல மருத்துவ உபகரணங்களுக்கான உதவிகளை வழங்க 'நாராயணா ஹெல்த்' இயக்குநர் தேவி பிரசாத் ஷெட்டி முன்வந்துள்ளார்.

மாநிலத்தின் நலன் கருதி வைரஸ் காய்ச்சலை முன்கூட்டியே கட்டுப்படுத்த கர்நாடக அரசுடன் இணைந்து பணியாற்ற இன்போசிஸ் பவுண்டேசன் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x