

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, அதைத் தடுக்க உதவும் கை கழுவும் திரவம் (சானிடைஸர்), முகக் கவசம், கையுறை ஆகியவற்றை அடுத்த 100 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் கொண்டுவந்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
மக்கள் கூட்டமாகக் கூடும் இடங்களைத் தவிர்த்தால் கரோனா வைரஸ் பரவுவதைப் பெரும்பாலும் குறைத்துவிடலாம் என்ற நோக்கில் பல்வேறு மாநில அரசுகளும் திரையரங்கு, ஷாப்பிங் மால், பள்ளி, கல்லூரி ஆகியவற்றை மூட உத்தரவிட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றவும் அனுமதித்துள்ளன.
கரோனா வைரஸிலிருந்து காத்துக்கொள்ள 90 நிமிடங்களுக்கு ஒருமுறை கைகளை சானிடைஸர், சோப்பு கொண்டு கழுவுவது கட்டாயமாகும். மேலும், பாதிக்கப்பட்டோர் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிதல் போன்றவை தற்காப்பு நடவடிக்கையாக இருக்கின்றன.
ஆனால், தற்போது திடீரென இந்தப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், அவை கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. சில கடை உரிமையாளர்கள் திடீரென விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.
இதையடுத்து, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் முகக் கவசம், கைகளைச் சுத்தம் செய்யும் திரவம், கையுறை ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பிரிவில் கொண்டுவந்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த வகைப் பொருட்களைப் பதுக்குவதோ, விலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தி அறிவிப்பதோ சட்டப்படி குற்றமாகும். இந்த பொருட்களின் விற்பனையை மாநில அரசுகள் ஒழுங்குபடுத்துவது அத்தியாவசியம்.
வரும் ஜூன் 30-ம் தேதி வரை இந்தப் பொருட்கள் அனைத்தும் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களைப் பதுக்குவோர் அல்லது அதிகமான விலைக்கு விற்பனை செய்வோர் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறையும், அபராதமும் விதிக்கப்படும். மேலும், கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஒழுங்குமுறைச்சட்டத்தின் கீழ் 6 மாதங்கள் காவலில் வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.